அதிமுக கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? சீட் பேரத்தில் நீடிக்கும் இழுபறி..

by எஸ். எம். கணபதி, Jan 28, 2021, 18:25 PM IST

அதிமுக கூட்டணியில் பாமக நீடிக்குமா என்பதில் சில காரணங்களால் இழுபறி தொடர்கிறது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம் பெற்றன. சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதே சமயம், அந்த கட்சிகளின் தரப்பில் அதை உறுதிப்படுத்தவில்லை. காரணம், பாஜகவினர் தற்போது தங்களைத் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்று கூறி, 60 சட்டமன்றத் தொகுதிகளைக் கேட்டு வருகிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் 5 மக்களவை தொகுதிகளை அவர்கள் பெற்றிருந்தனர்.அதே அணியில் பாமக கட்சி 7 மக்களவை தொகுதிகளைப் பெற்றிருந்தது. அதனால் இப்போது பாஜகவினருக்குக் கொடுக்கும் தொகுதிகளை விட ஒன்றாவது அதிகமாகத் தர வேண்டுமென பாமக நிர்ப்பந்திப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக மத்தியில் ஆட்சி செய்வதால், ஊழல் வழக்குகளைக் காட்டி அதிமுகவினரை மிரட்டியே 30 சட்டமன்றத் தொகுதிகளைப் பெறுவார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது. அப்படி கொடுத்தால் பாமக 31 தொகுதிகளைக் கேட்கும். இதே தேமுதிகவும் கேட்கும். இப்படிப் பங்கிட்டால் அதிமுக 150 தொகுதிகளில் கூட போட்டியிட முடியாத நிலை ஏற்படும். அதனால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.

இந்நிலையில், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்த சந்தேகங்களும், அதற்கான விளக்கங்களும் என்ற தலைப்பில் சென்னையில் ஜன.27ல் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணையவழியில் பேசினார். அதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 24 சதவீதம் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த 40 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்தபோது இக்கோரிக்கையை வலியுறுத்தினோம். முதல்வருக்குக் கடிதங்களும் அனுப்பினேன். முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது தொடர்பாக 2 அமைச்சர்கள் என்னை சந்தித்த போதும், இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து விரிவாக எடுத்துரைத்தோம். அதற்கு பிறகும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இப்போது, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு என்ற நிலையில் இருந்து உள்ஒதுக்கீடு என்ற நிலைக்கு இறங்கி வந்து விட்டோம். கல்வி, சமூக, பொருளாதார, அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு தர வேண்டும். இது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜன.31க்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். இல்லாவிட்டால், 31ல் நடைபெறும் பாமக நிர்வாகக் குழுவில், அதிமுக கூட்டணியில் தொடர்வது பற்றி பேசுவோம். பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் பாமக பொதுக் குழுவில் ஆலோசித்து அரசியல் ரீதியாக முடிவு எடுப்போம்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் இப்படி கூறியிருந்தாலும் சீட் பேரத்தால்தான் கூட்டணி இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது. பாமகவுக்கு 30 தொகுதிகள் கிடைத்தால் கூட்டணி உறுதியாகி விடும். அத்துடன், உள் ஒதுக்கீடு குறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் பாமக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. அதிமுக தரப்பிலோ பாஜக, பாமக கட்சிகளுக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள்தான் தரப்படும் என்றும் அதிமுக குறைந்தபட்சம் 170 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் பேசுகிறார்கள்.

You'r reading அதிமுக கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா? சீட் பேரத்தில் நீடிக்கும் இழுபறி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை