தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருந்த உப்பளத் தொழில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான தொழில்களில் உப்பு உற்பத்தியும் ஒன்று. இம்மாவட்டத்தில் வேம்பார் முதல் ஆறுமுகனேரி வரை சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது.
மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் மழை காரணமாக உப்பள தொழில் நடக்காது. மழைக்கு பின்னர் ஜனவரி மாதம் பணி துவங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காலம் கடந்த பருவ மழையால் செப்டம்பர் மாதம் முதல் ஐந்து மாதங்கள் உப்பு உற்பத்தி நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது வெயில் அடிக்க தொடங்கியுள்ள்தால் உப்பள பாத்திகள் உலர்ந்து வருகிறது. காய்ந்துள்ள உப்பள பாத்திகளில் படிந்துள்ள பழைய படிவங்களை அகற்றி தண்ணீரை தேக்கும் பணியில் உப்பளத் தொழிலாளர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாத்திகளை தொடர்ந்து பராமரித்து வருவதன் மூலம் உப்பு உற்பத்தி செய்வார்கள். இன்னும் இரண்டு மாதம் கழித்து இந்த உப்பளங்களில் உப்பு அறுவடை செய்ய முடியும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.