வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளருக்கு ஜாமீன்

by Nishanth, Feb 3, 2021, 15:29 PM IST

கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கிலும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கு இன்று ஜாமீன் கிடைத்துள்ளது. இதையடுத்து 98 நாட்களுக்குப் பின்னர் இன்று அல்லது நாளை அவர் சிறையில் இருந்து விடுதலையாகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகா ஆகியவை நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஸ்வப்னா சுரேஷ் தலைமையில் இயங்கி வந்த கும்பல் அமீரக தூதரக பார்சல் மூலம் இதற்கு முன்பு பலமுறை தங்கம் கடத்தினர். தங்கம் கடத்தியதோடு மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்து வெளிநாட்டுக்கு டாலர்கள் கடத்தியதும், இந்தக் கும்பலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உதவி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரை முதலில் மத்திய அமலாக்கத் துறையும், இதன் பின்னர் வரிசையாக தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் சுங்க இலாகாவும் கைது செய்தது. இதன் பின்னர் இவர் எர்ணாகுளத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது தங்கக் கடத்தல் வழக்கு, வெளிநாட்டுக்கு டாலர்கள் கடத்தியது மற்றும் கருப்பு பணத்தை பதுக்கியது ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்குகளில் இருந்து ஜாமீன் கோரி சிவசங்கர் மனு தாக்கல் செய்தார். ஆனால் பலமுறை இவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் தங்கம் கடத்தல் மற்றும் கருப்பு பணம் வழக்குகளில் சிவசங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால் வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் அவரால் சிறையிலிருந்து வெளிவர முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் இன்று டாலர் கடத்திய வழக்கிலும் சிவசங்கருக்குர ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து இன்று அல்லது நாளை அவர் சிறையிலிருந்து விடுதலை ஆவார் என கருதப்படுகிறது.

You'r reading வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளருக்கு ஜாமீன் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை