காபாவில் இந்தியா வெற்றி பெற்றதும் அழுது விட்டேன் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறுகிறார்

by Nishanth, Feb 3, 2021, 16:44 PM IST

ஆஸ்திரேலியாவில் காபா மைதானத்தில் இந்திய இளம் வீரர்களின் அபார ஆட்டத்தைப் பார்த்து நான் மெய்சிலிர்த்து போனேன். இறுதியில் இந்தியா வெற்றி பெற்றபோது அழுது விட்டேன் என்று கூறுகிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண். 2021 ஜனவரி 19 என்ற தேதியை இந்திய ரசிகர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். அன்று தான் ஆஸ்திரேலியாவில் உள்ள காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் 32 வருட தொடர் வெற்றிக்கு இந்திய வீரர்கள் தடை போட்டார்கள். இந்த வெற்றி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்திய அணியில் முக்கிய பேட்ஸ்மேன்களான விராட் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய 3 பேரும் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் மூலம் இந்த வெற்றி கிடைத்தது. இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய முன்னாள் வீரர்களுக்கும், பிரபல சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

காபா மைதானத்தில் 32 வருட ஆஸ்திரேலிய சாதனையை முறியடித்த இந்திய அணிக்கு பல முன்னணி வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றியைப் பார்த்து நான் அழுது விட்டேன் என்று கூறுகிறார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லட்சுமண். ஒரு விளையாட்டு பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது: பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை நான் என்னுடைய வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசி நாளில் நான் மிகுந்த பதற்றத்துடன் இருந்தேன். குறிப்பாக வாஷிங்டன் சுந்தரும், ரிஷப் பந்தும் பேட்டிங் செய்யும் போது நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். ஏனென்றால் அவர்கள் இருவரும் நன்றாக விளையாட விட்டால் நிச்சயமாக இந்தியாவால் வெற்றி பெற முடியாது என எனக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்து தொடரை வெல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன்.

பல வருடங்களாக தோல்வியே சந்திக்காத பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுவதற்கு இந்தியாவுக்கு பயமாக இருக்கிறது என்று பலரும் கூறினர். ஒரு கிரிக்கெட் போட்டியை பார்த்து விட்டு நான் அழுவது இது இரண்டாவது முறையாகும். 2011ல் இந்தியா ஒரு நாள் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற போது தான் நான் முதன்முதலாக அழுதேன். ஒரு கிரிக்கெட் வீரர் என்ற முறையில் இதுவரை ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய அணியை தோற்கடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இளம் இந்திய வீரர்கள் அந்த சாதனையை செய்ததில் எனக்கு பெருமையாக உள்ளது. இந்திய அணியின் இந்த சாதனையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்போது என்னுடைய கண்கள் கலங்கிவிட்டன. இந்திய அணியின் இந்த வெற்றி நம்முடைய நாட்டுக்கே பெருமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading காபாவில் இந்தியா வெற்றி பெற்றதும் அழுது விட்டேன் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் கூறுகிறார் Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை