சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் பூ தூவிட அனுமதி வேண்டி குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் முடிவு செய்திருக்கிறார் இதற்காக அரசிடம் முறைப்படி அனுமதி வேண்டி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.கடந்த 2016ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஜெயந்தி பத்மநாபன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இவர்டிடிவி தினகரன் அணியில் இருந்தார். இதைத் தொடர்ந்து, இவரையும் சேர்த்து 18 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு, இவர் அதே தொகுதியின் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
சசிகலா வரும் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார் இதையொட்டி அவருக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவி வரவேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது இதற்காக ஜெயந்தி பத்மநாபன் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் இன்று அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளார். அதில், சசிகலா எட்டாம் தேதி வர இருக்கிறார் அவருக்கு மாதனூரை அடுத்த கூத்தம்பாக்கத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.அப்போது தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க உள்ளேன்.
அதற்காகப் பிப்ரவரி 7-ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். சசிகலாவை வரவேற்க அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இது குறித்து முதல்வர் அலுவலகத்துக்கு ஆட்சியர் பரிந்துரை செய்திருப்பதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.