பிரைவசி கொள்கை டெலிகிராம். சிக்னல் செயலி வந்தாலும் இன்னும் வாட்ஸ் அப் தர்பார் தான்!

by Sasitharan, Feb 4, 2021, 19:02 PM IST

பிரைவசி கொள்கை தொடர்பாக அண்மையில் உண்டான சர்ச்சையின் பின்னணியில் வாட்ஸ்அப் சிக்கியுள்ளது. வாட்ஸ்அப் இதற்கு முன் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி, விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும், அதன் பயனாளிகள் இந்த அளவு அதிருப்தி அடைந்தது இல்லை. வாட்ஸ்அப் அபிமானிகள் வேறு சேவைகள் பற்றி பேசத் துவங்கியிருப்பது முதல் முறையாக நிகழ்ந்துள்ளது. இதனிடையே, இந்திய அரசும் வாட்ஸ்அப்புக்கு புதிய பிரைவசி கொள்கையை கைவிடுமாறு நிபந்தனை விதித்துள்ளது.

இதற்கிடையே, வாட்ஸ்அப் தரவுகளை ஃபேஸ்புக்கிற்கு அளிக்க கட்டாயப்படுத்துகிறது என்பதுதான், இப்போதைய சர்ச்சையின் மையப் புள்ளி. வாட்ஸ்அப் இதை புதிதாக செய்யவில்லை, ஏதோ ஒரு விதத்தில் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கிறது. இது பலருக்கு ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால், வாட்ஸ்அப் 'மெட்டாடேட்டா' என சொல்லப்படும் தகவல்களை, 2016-ஆம் ஆண்டு முதல் ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து வருகிறது. இதிலிருந்து விலகிக்கொள்ள இதற்கு முன் வாய்ப்பளித்திருந்தது. இப்போது, அந்த வாய்ப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்கள் தகவல்களை சேகரிக்கிறது என தெரிந்த பிறகு, அவற்றிடம் என் தகவல்கள் மீது கை வைக்காதீர்கள் என்று சொல்ல முடியுமா? சேவையில் இணையும்போதே, நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதால் இது சாத்தியமே இல்லை. வேண்டுமானால் சேவையில் இருந்து வெளியேறலாம். சேவையில் இருந்து வெளியேறினாலும், ஏற்கெனவே திரட்டப்பட்ட தகவல்களை முழுவதுமாக நீக்கச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. அப்படியே சொல்ல முடிந்தாலும், அதை உறுதி செய்துகொள்ள வழி இருக்கிறதா? எனத் தெரியவில்லை.

இருப்பினும், இப்போதைக்கு வாட்ஸ்அப்புக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்த சர்ச்சை வாட்ஸ்அப்பின் நம்பகத்தன்மையை பாதித்து, சராசரி பயனாளிகள் அதன் மீது சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது என்பது உண்மைதான். அதற்காக, அதன் பெரும்பாலான பயனாளிகள் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறுவார்கள் என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட மெசேஜிங் சேவைகள் வந்தாலும் இன்னும் வாட்ஸ் அப் தர்பார் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பிரைவசி கொள்கை டெலிகிராம். சிக்னல் செயலி வந்தாலும் இன்னும் வாட்ஸ் அப் தர்பார் தான்! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை