தேர்தல் முடிவை வெளியிட கோரி தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் கழித்தும் நீதி கிடைக்கவில்லை. பல லட்சம் செலவாகிப் பல லட்சம் கடனாளியாகி ஆனதுதான் மிச்சம் எனவே இனி நீதிமன்றத்தை நடப்பதில்லை என முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் 2016 இல் நடந்த தேர்தலில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டார் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
திமுகவுக்கு அளிக்கப்பட்டிருந்த சில குறிப்பிட்ட தபால் ஓட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது தபால் ஓட்டுகள் முறையாக உயரதிகாரியிடம் தான் சான்றொப்பம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறி தேர்தல் அதிகாரிகள் அந்த தபால் ஓட்டுகளைச் செல்லாத ஓட்டுக்கள் என்று அறிவித்ததால் அப்பாவு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இதை தொடர்ந்து அப்பாவு உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. மறு வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டாலும் முடிவுகள் வெளியிடப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே இன்று டெல்லியில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால் அப்பாவு விற்கு உரிய உத்தரவு கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் நீதிமன்றத்தின் மீது எனக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. பல லட்சம் கடனாளி ஆனதுதான் மிச்சம். எனவே இனி நீதிமன்றத்தை நாட மாட்டேன் என்றார் அவர்.நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது:தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்கிறார்கள். தேர்தல் வழக்கு என்று சொன்னால் ஆறு மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சொல்லி உச்சநீதிமன்றமே ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் என்னுடைய வழக்கைப் பாருங்கள் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் உயர்நீதிமன்றம் பின்னர் உச்சநீதிமன்றம் பின்னர் மீண்டும் உயர்நீதிமன்றமும் இப்போது உச்ச நீதிமன்றம் அளித்த கெடு என்ன ஆனது? சட்டசபையின் பதவிக்காலம் முடியப் போகிறது. தொகுதி மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமையைச் செய்ய முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கை இனி இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை அதனால் என் தொகுதி மக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து விட்டேன். உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று வரவே பல லட்சங்கள் செலவாகி விட்டது. பல லட்சங்கள் கொடுக்கவேண்டிய கடனாளியாகி விட்டேன்.இப்படிப்பட்ட நிலையில் இது இறுதியாக இன்றைக்கு ஒரு முயற்சி பண்ணி பாப்போம் என்று வந்தேன். இன்று எனக்கு நீதி மறுக்கப்பட்டு விட்டது. இனிமேல் இந்த வழக்கு விஷயமாக உச்சநீதிமன்றத்தில் நான் முயற்சி செய்வதை இதோடு நிறுத்திக் கொள்கிறேன் என்று நான் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அப்பாவு.