டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் ஹோட்டல் பெயரில் மூன்று நிறுவனங்கள் தொடங்கப்பட்டதில் 36.36 லட்சம் அமெரிக்க டாலரும், 1 லட்சம் பவுண்டு வரை அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்ககோரி டி.டி.வி. தினகரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பார்க்லே வங்கியில் 1.04 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்தது தொடர்பான வழக்கின் மேல் விசாரணை அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை புதனன்று (ஏப். 18) விசாரித்த நீதிபதி டீக்காராமன், ஜூன் 9க்குள் பதில் மனு தாக்கல் செய்ய அமலாக்க துறைக்கு உத்தரவிட்டார். அதுவரை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ஏற்கனவே பார்க்லே வங்கி முதலீடு வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.