தமிழகத்தில் நகர் புறங்களில் உள்ள அனைத்து நூலகங்களை நான்கு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவர் தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நூலகங்களைத் திறக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து நூலகங்களும் பல மாதங்களாக மூடப்பட்டது .ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், டாஸ் மார்க் பார்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் நூலகங்கள் மட்டும் முன் போல இயங்க அனுமதிக்கப்படவில்லை.
தற்போது போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நூலகங்கள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு மிகுந்த உதவியாக அமையும். ஆகவே நூலகங்களைத் திறக்க அனுமதி வழங்கி அனைத்து நூலகங்களையும் திறக்கவும், வழக்கம்போல இயங்கவும் உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு நான்கு வாரங்களுக்குள் தமிழகத்தில் நகர் புறத்தில் உள்ள அனைத்து நூலகங்களைத் திறக்க உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள், " கிராமப்புற நூலகங்களே மிக முக்கியமானவை. கொரோனாவால் அதிக தொற்றுக்கு ஆளானது அதிகம் நகர்ப்புறங்களே. அங்கிருக்கும் நூலகங்களே திறக்கப்பட்டிருக்கும் நிலையில், கிராமப்புற நூலகங்கள் விரைவாகத் திறக்கப்பட வேண்டும்" எனக் கருத்து தெரிவித்தனர்.மனுதாரர் தரப்பில் கிராமப்புற நூலகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கிராமப்புற நூலகங்கள் திறப்பது தொடர்பாக 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.