சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது அஷ்வினை விட முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி 161 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவுக்குத் கொடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா அபாரமாக ஆடி 231 பந்துகளில் 161 ரன்கள் குவித்தார். 2வது இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மிக அபாரமாக ஆடி 106 ரன்கள் எடுத்தார்.
இந்த டெஸ்ட் போட்டியில் 1 சதமும், முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் உள்பட மொத்தம் 8 விக்கெட்டுகளை சாய்த்த அஷ்வினுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது வழங்கப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் அவருக்குத் தான் விருது கிடைக்க வேண்டும் என விரும்பினர். அதுபோலவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஆனால் மேன் ஆப் தி மேட்ச் விருது ரோகித் சர்மாவுக்குத் தான் வழங்கியிருக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது: சென்னை சேப்பாக்கம் பிட்சில் வீரர்கள் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. அந்த பிட்சில் சிறப்பாக ஆடி ரோகித் சதம் அடித்ததால் தான் முதல் இன்னிங்சில் இந்திய அணியால் மிகப் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது. முதல் இன்னிங்சில் இந்தியாவுக்கு கிடைத்த 329 ரன்களில் 161 ரன்களும் ரோகித்தின் பேட்டில் இருந்து வந்ததாகும். தொடக்கத்திலேயே இந்திய வீரர்கள் ஆட்டமிழந்த போது ரோகித் நிலைத்து நின்று ஆடியதால் தான் இந்திய அணிக்கு நல்ல ஸ்கோர் கிடைத்தது. சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை வைத்துத் தான் நான் இவ்வாறு கூறுகிறேன். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்வது தான் சிறந்த முடிவு என்று அனைவருக்கும் தெரியும். சேப்பாக்கம் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே உதவும். நாட்கள் செல்லச் செல்ல அந்த பிட்சில் பேட்டிங் செய்வது மிகவும் சிரமமாகும். 2வது இன்னிங்சில் அஷ்வின் சதம் அடித்ததை நான் குறைத்து மதிப்பிடவில்லை.
ஆனால் அஷ்வின் சதம் அடிப்பதற்கு முன்பே இந்தியா வெற்றி பெறும் நிலைக்கு வந்து விட்டது.அஷ்வினின் சதம் இந்தியாவின் வெற்றியையோ, தோல்வியையோ நிர்ணயிக்கும் அளவில் இல்லை. எனவே அந்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவுக்குத் தான் விருது கொடுத்திருக்க வேண்டும். முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா 60 ரன்கள் மட்டுமே எடுத்தார் என வைத்துக் கொள்வோம். அப்போது இந்தியாவின் நிலை எப்படி இருந்திருக்கும்? 2வது இன்னிங்சில் என்ன நடந்திருக்கும்? 2வது இன்னிங்சில் எப்படி விளையாடியிருந்தாலும் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். அதற்கு ரோகித் சர்மா தான் முக்கிய காரணமாகும். ஏனென்றால் அந்த அளவுக்கு முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.