தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருப்பதால் பள்ளிகள் திங்கள்கிழமை (மார்ச் 22) முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரைக்கும் 9,10 மற்றும் 11 வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (மார்ச் 20) நிலவரப்படி தமிழ்நாட்டில் புதிதாக 1,243 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 634 பேர் சிகிச்சைக்குப் பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 8 பேர் மரணமடைந்துள்ளனர். மொத்தத்தில் தமிழ்நாட்டில் 8,65,693 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. 8,45,812 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 12,590 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மாநிலத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையானது 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான நேரடி வகுப்புகள் மறு அறிவிப்பு வரும்வரை நடைபெறாது என்று அறிவித்துள்ளது. இணையவழி (ஆன்லைன்) உள்ளிட்ட டிஜிட்டல் முறையில் இவ்வகுப்புகளுக்கு பாடம் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மாணவ மாணவியருக்கு விடுதிகளும் மூடப்படுகிறது.
தமிழ்நாடு பாடத்திட்டத்தை தவிர்த்து ஏனைய பாடத்திட்டத்தின்படி 10ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட இருந்தால் அவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதற்கும் விடுதிகள் செயல்படுவதற்கும் அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.