வேலுமணியின் வேட்பு மனு: நீதிமன்றம் செல்லுமா திமுக?

by SAM ASIR, Mar 21, 2021, 13:17 PM IST

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ஏற்றுக்கொண்டதால் நீதிமன்றம் செல்ல இருப்பதாக தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் காத்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். அமைச்சர் தம் வருமானத்திற்கான ஆதாரங்கள் குறித்த ஆவணங்களை வேட்பு மனுவுடன் சமர்ப்பிக்கவில்லை. அவரது மகளுக்காக சொத்துகளின் வருமானத்திற்கான ஆதாரங்களை கூறவில்லை. ஆகவே அவரது வேட்புமனுவை நிராகரிக்கவேண்டும் என்று கார்த்திகேய சிவசேனாபதி பேரூரில் தேர்தல் அலுவலர் செந்திலரசனிடம் சனிக்கிழமையன்று புகார் அளித்தார். ஆனால் வேலுமணியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், திமுக நீதிமன்றத்தை நாடும் என்று சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேர்தல் விதிமுறைகளின்படி சரியான முறையில் வழக்குரைஞர் கையெழுத்தை பெறவில்லை என்று கூறி, அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வதற்கு அமமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அமைச்சர் உதயகுமாரின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 7,243 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜ மாநில தலைவர் எல். முருகன், அமமுக நிறுவனம் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோரது மனுக்கள் உள்ளிட்ட 3,550 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. திருநெல்வேலி தொகுதி அமமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேட்டுப்பாளையம் வேட்பாளர் என். ராஜ்குமார், திருவள்ளூர் வேட்பாளர் எஸ்.தணிகைவேல் உள்ளிட்ட 2,126க்கும் அதிகமானோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

You'r reading வேலுமணியின் வேட்பு மனு: நீதிமன்றம் செல்லுமா திமுக? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை