தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? – தலைமைச்செயலகத்தில் அவசர ஆலோசனை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,986 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 332 பேரும், செங்கல்பட்டில் 390 பேரும், திருவள்ளூரில் 208 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 9,11,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தீவிரமாக பரவிவரும் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் நாளை அறிவிக்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும், கொரோனாவைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பழையபடி சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, பொது இடங்களில் அதிகமான நபர்கள் கூடக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் தீவிரமாக்கப்படும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர, தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டதுதான் காரணம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.