கடும் மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு நடிகர் கார்த்திக் மாற்றப்பட்டுள்ளார்.
திரையுலகில் இருந்து ஓய்வு பெற்ற நடிகர் கார்த்திக், மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். இதனிடையே சில படங்களில் அவ்வப்போது கௌரவ கதாபாத்திரமாக நடித்து வருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக அறிவித்தார் கார்த்திக். இதனிடையே கடந்த மாதம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தொடர் சிகிசைசக்கு பின் உடல்நலம் தேறிவந்த அவர் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்தார். போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர், சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி கந்தசாமியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கார்த்திக் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவருக்கு கொரேனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. ஆனால் மூச்சு திணறல் இருந்ததால் நடிகர் கார்த்திக்கிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.