மக்களின் தொடர் போராட்டம் மற்றும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட பிரச்னைகளால் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட்டதாக ஜெம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடியம்மன் கோவில் திடலில் கிராம வாசிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்
ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்ற ஜெம் என்ற தனியார் நிறுவனம் அனுமதி வாங்கியது முதல் 180 நாட்களுக்குள் திட்டத்தினை செயல் படுத்த வேண்டும் என்ற சட்ட விதிகள் உள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனுமதியை வாங்கிய ஜெம் நிறுவனத்தால் தற்போதுவரை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தினை துவங்க முடியவில்லை.
ஜெம் நிறுவனம் அனுமதி பெற்ற நாள் முதல் இன்று வரை இரண்டு கட்டங்களாக சுமார் 175 நாட்கள் இந்த ஹைட்ரா கார்பன் எதிர்ப்பு குழு தொடர்ந்து போராடியது.
இதற்கிடையே, இத்திட்டத்தினை துவங்க நெடுவாசல் தவிர வேறு ஒரு இடத்தினை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜெம் நிறுவனம் ஒரு கடிதத்தை மத்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயு துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது. அதற்கு பதில் கடிதம் எதுவும் ஜெம் நிறுவனத்திற்கு அமைச்சகம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் தமிழக அரசும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு கொடுத்த குத்தகையை தங்களுக்கு மாற்றி தர காலதாமதம் செய்து வருகிறது என்ற மனநிலையில் உள்ளது ஜெம் நிறுவனம்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளிக்க கூடாது என்று நெடுவாசல் கிராம மக்கள் சார்பாக தொடர்ந்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
இது அனைத்தும் சேர்ந்து ஜெம் நிறுவனத்தை, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தினை கை விடுவது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரா கார்பன் எடுக்கும் திட்டத்தை கை விடுவதாக ஜெம் நிறுவனம் அறிவித்துவிட்டது.
மத்திய எரிவாயு மற்றும் பெட்ரோலிய அமைச்சகம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து விட்டதாக அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தால் மட்டுமே எங்களால் அதனை உறுதி படுத்த முடியும். அதுவரை எங்களால் எந்த ஒரு முடிவினையும் எடுக்க முடியாது என்றும் 12ந் தேதி நெடுவாசலில் ஆலோசனை செய்து அடுத்த கட்ட முடிவினை எடுக்க உள்ளோம் என்றும் போராட்ட குழுவை சேர்ந்த உறுப்பினர் திருமுருகன் கூறியுள்ளார்.