பத்திரிகையாளர் அன்பர்களின் மனது புண்படும்படி பேசி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். பின்னர், ரஜினிகாந்த் தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆவேசமாக ரஜினி பதிலளித்தார். ஒரு கட்டத்தில், “ஏய் வேறு எதாவது கேள்வி இருக்கா ?” என்று கோபமாக கேட்டுள்ளார்.
இதற்கு, பத்திரகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்ததுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது. இதை தொடர்ந்து, ரஜினி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வருந்துவதாக ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், “விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது நான் மிரட்டலாக ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.