2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று, சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை வல்லுநர் குழு ஆய்வு செய்து வருகிறது. பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், குவளைகள் போன்றவற்றை தடை செய்யவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்க அந்த குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதனை பரிந்துரைத்த தமிழக அரசு, 2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
மக்காத பிளாஸ்டிக் பொருட்களான, பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர், தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, துணிப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்த மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.