சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக இன்சுலின் மருந்து வழங்கக் கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தேவராஜன், சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவசமாக இன்சுலின் வழங்கக் கோரி பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
இலவச மிக்ஸி, கிரைண்டர், தாலி, சைக்கிள் போன்ற திட்டங்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு செய்யும் அரசு, இன்சுலின் மருந்தை இலவசமாக வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தரபிரதேசம், டெல்லி, மத்திய பிரதேச மாநிலங்களில் இன்சுலின் மருந்து இலவசமாக வழங்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சர்க்கரை நோயையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.