காவலர்கள் அளிக்கும் ரத்தம் ஒரு சொட்டுக் கூட வீணாக வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தமிழக காவல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் ரத்த தான முகாம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில், முதலமைச்சர் பழனிசாமி ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.
முன்னதாக முகாமிற்கு வருகை தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
3 ஆயிரம் சென்னை காவலர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய காவல் துறை உயர் அதிகாரிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், “காவலர்கள் அளிக்கும் ரத்தம் ஒரு சொட்டுக் கூட வீணாக வாய்ப்பில்லை. ரத்தத்தில் இருந்து பிளேட்லெட், பிளாஸ்மா செல்லை பிரித்தெடுத்து ஓராண்டு வரை பாதுகாக்கும் வசதி இருக்கிறது" எனக் கூறினார்.