மதுரை மாவட்டத்தில் வரும் ஜூலை 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து மதுரை ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் இங்கு அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பிளாஸ்டிக் பொருட்களை தடை விதிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மதுரையில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: தமிழகம் முழுவதும் வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாதம் வரை அவகாசம் இருப்பதால், பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, துணிப்பை, காகிதப் பை, பாக்கு மட்டை தட்டுகள், கோப்பைகள், தென்னை மற்றும் பனை ஓலை கூடைகள் உள்ளிட்டவை பொது மக்கள் பயன்படுத்தி பழக வேண்டும். இதன் காரணமாக, பொது மக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.