18 எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பளித்த நீதிபதி சுந்தருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுனரிடம் கடிதம் கொடுத்த தங்கத்தமிழ் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, 18 எம்.எல்.ஏ.க்களும் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு, கடந்த மாதம் 14-ம் தேதி தீர்ப்பளித்தது. இதில், சபாநாயகரின் உத்தரவை உறுதி செய்து தலைமை நீதிபதி தீர்ப்பளித்தார்.
ஆனால், நீதிபதி எம்.சுந்தர், சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இதன் காரணமாக, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.சத்தியநாராயணன், வரும் 23-ஆம் தேதி முதல் வழக்கின் விசாரணையை துவங்க உள்ளார்.
தற்போது நீதிபதி சுந்தர் மதுரைக் கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆளுங்கட்சிக்கு எதிராக தீர்ப்பளித்ததாகக் கூறி, நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து மொட்டைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை நீதிபதி சுந்தர், தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார். உடனடியாக சென்னை மாநகர காவல் ஆணையரை அழைத்துப் பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, நீதிபதி சுந்தர் வீட்டுக்கு செல்லும் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தி, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.