தமிழ் நீட் வினாத்தாளில் பல கேள்விகளில் பிழை இருந்ததால், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கான உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிபிஎம் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்ட போது தமிழிலும் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. அதில் 49 கேள்விகள் பிழையாக இருந்துள்ளது.
இதனால் தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘கேள்விகளில் தவறு இருந்ததை கருத்தில் கொண்டு தமிழில் தேர்வெழுதிய மாணவர்கள் மொத்தம் இருக்கும் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் கொடுக்கப்பட வேண்டும்.
மாற்றம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை 2 வாரத்தில் சிபிஎஸ்இ வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு மூலம் 24,000 தமிழக மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிம்ன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில், மதிப்பெண் மாற்றத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.