சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
தனது அரசியல் பயனத்தில் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்த தி.மு.க தலைவர் கருணாநிதி (94) வயது முதிர்வு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து சற்று விலகி ஓய்வு எடுத்து வந்தார்.
சுவாசப் பிரச்னையால் அவரது கழுத்து பகுதியில் துளையிட்டு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டது. அவ்வப்போது, மருத்துவமனைக்கு சென்று அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.
மேலும், கருணாநிதிக்கு சுயநினைவு மற்றும் பேச்சு ஆற்றல் குறைய ஆரம்பித்தது. இதனால், அவர் தனது அரசியல் காலங்களில் கால்பதித்த இடங்களுக்கும், மகன்கள் மற்றும் மகள் வீட்டிற்கும் அவ்வப்போது மகிழ்ச்சியான தருணங்களை நினைவுப்படுத்துவதற்காக அழைத்து சென்று வந்தனர். சில நேரங்களில், தனது கொள்ளுப் பேரன்களுடன் விளையாடும் வீடியோக்கள் கூட நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அவரது உடல் நலிவடைந்து. பின்னர், மருத்துவ குழுவினர் 24 மணி நேரம் கண்காணிப்பில் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டனர். இதனால், கருணாநிதியின் உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக கூறப்பட்டது.
ஆனால், தொடர்ந்து 27ம் தேதி நள்ளிரவு ரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து அவரை உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு ஐசியு பிரிவில் மருத்துவ குழுவினர் அவருக்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இன்றுடன் 10வது நாளாக கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவக்குழுவினர் தெரிவித்து வந்தனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக கருணாநிதியின் உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டது.
தொடர்ந்து, இன்று கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இது தொடர்பாக காவேரி மருத்துவமனை நேற்று மாலை 6.30 மணியளவில் அறிக்கை வெளியிட்டனர். அதில் முக்கிய உறுப்புகள் சீராக இயக்குவதில் சவாலாக இருப்பதாகவும், 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பு, சிகிச்சைக்கு பிறகே கருணாநிதியின் உடல்நலம் குறித்து தெரிவிக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து, இன்றும் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கடமாக உள்ளது என்ற தகவல் பரவியது. பின்னர், இன்று மாலை 4.30 மணியளவில் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், கருணாநிதியின் உடல்நிலை பெரும் பின்னடைவு ஏற்பட்டது என்றும் நிலையான உடல்நிலை இல்லை என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை காவேரி மருத்துவமனை 6.40 மணியளவில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.