திமுக தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்.
திருக்குவளை என்ற சிறிய குக்கிராமத்தில், 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் கருணாநிதி.
நாட்டின் மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் கலைஞர் கருணாநிதி. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் மிக முக்கிய தூணாக இருந்து வந்தார். 1969-ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகாலம் கட்சித் தலைவராக இருந்து திறம்பட வழிநடத்தியவர்.
60 ஆண்டுகாலம் அரசியலில் வலிமையான சக்தியாக மிகுந்த ஆளுமையோடு கோலோச்சிய கருணாநிதி தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஓர் உயரிய இடத்தைத் தக்கவைத்து அரசியல் சாணக்கியனாக நின்று அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர்.
தமிழ் இலக்கியத்தின் மீது அவளவற்ற ஈடுபாடு கொண்டிருந்த கருணாநிதி, ‘தொல்காப்பியப் பூங்கா’ உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். திரைப்படத்திற்கு வசனம், பாடல்கள், கவிதைகள், நாடக நடிப்பு உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்டவராகத் திகழ்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி. இவர் தமிழுக்கு அளித்த கொடை அளப்பெரியது.
கரகரத்தக் குரலில் பேசி மனதை ஈர்க்கும் அவரின் பேச்சு கேட்பவரைக் கிரங்க வைக்கும். இனி அந்த வாய் ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே’ என்றும் ‘அதுமாத்தரமல்ல’ என்ற சொல்லை ஒருபோதும் உச்சரிக்காதா என்று கூறியபடி, தொண்டர்கள் கண்கலங்கி கதறி அழுதவாறு கூப்பாடு போடுவது காண்போரை சோகத்தில் ஆழ்த்தி வருகின்றது.
பல ஆண்டுகள் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு மக்களின் மனதில் சுழன்றுவந்த அந்த ஆலமரம் சாய்ந்துகிடக்கிறது. அவர் சொல்லாடிய சபைபும், கைபிடித்த பேனாவும் அவரின் கால்பட்ட பூமியும் ஏங்கிக் கிடக்கின்றன. ஒரே பார்வையில் எதிரில் இருப்பவரின் உள்ளத்தை கணிக்கும் அந்த கண்கள் அசைவற்றுக் கிடக்கின்றன.
எதுகை மோனையுடன் அடுக்கு மொழியில் சொல்லம்பு தொடுக்கும் அவரின் வார்த்தைகளை தெவிட்டத் தெவிட்டக் கேட்ட கோடிக்கணக்கான தொண்டர்கள், இனி அந்த சொற்களை கேட்கமுடியாதா என்று எண்ணியபடி தலையிலும் மார்பிலும், அடித்துக்கொண்டு கதறி அழுதுவருகின்றனர்.
அவரது மறைவு தொண்டர்களுக்கு சொல்லொனா துயரைத் தந்துள்ளது. கட்சி பேதமின்றி தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.