அரசுப் பணியை சார்ந்த அனைத்து துறைகளிலும், அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா, அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், அரசுத் துறை தலைவர்கள், ஆகியோர் அடையாள அட்டை குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், "அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது கண்டிப்பாக அணிவதை அந்தந்த துறையின் தலைவர் உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 16.7.2018 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அடையாள அட்டை குறித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் குறிப்பாக, பொதுமக்களிடம் நேரடியாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 60 நாட்களுக்குள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அடையாள அட்டை அணிவது தொடர்பாக, ஏற்கனவே அரசு விதி இருந்தால் அந்த விதியை மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும் விதியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.