குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவிடம் 12 மணிநேரம் சிபிஐ விசாரணை நடத்தியது.
குட்கா ஊழல் விவகாரத்தை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கடந்த மே 30ஆம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிடாத தமிழக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. முதற்கட்டமாக சிபிஐ அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை இடமிருந்து ஆவணங்களை பெற்றுக் கொண்டது.
குட்கா ஊழல் விவகாரம் வெளி வருவதற்கு முக்கிய காரணம் , கடந்த 2016-ஆம் ஆண்டு மாதவரத்தில் குட்கா வியாபாரி மாதவராவ் குடோனில் நடந்த வருமான வரி சோதனையின் மூலம் தான் தெரிய வந்தது. அதில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா டைரியில் பல அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மாதவராவ் குட்கா வியாபாரம் செய்த ஆண்டுகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பட்டியலை சிபிஐ வாங்கி சென்றது. இதேபோல் மத்திய கலால் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பட்டியலையும் வாங்கி சென்றது. அதோடு குட்கா ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 3 மாதத்தில் குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த சிபிஐ முதற்கட்டமாக குட்கா நிறுவன உரிமையாளர் மாதவராவ் இடமிருந்து விசாரணையை துவங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி மாதவராவுக்கு சம்மன் அனுப்பியது.
அதன்படி, ஆஜரான மாதவராவிடம், சுமார் 12 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குட்கா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்ட பிறகும், எவ்வாறு விற்பனை செய்யப்பட்டது? குட்கா பொருட்கள் தமிழகத்துக்கு எப்படி கொண்டு வரப்பட்ட்டு கடைகளில் வினியோகிக்கப்பட்டது?
அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார்? யார்? அமைச்சர்கள் யார்? என்று அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். தாங்கள் வைத்திருந்த அதிகாரிகள் பட்டியலை வைத்து மாதவராவ் குட்கா தொழிலுக்கு எவ்வாறு உதவினார்கள் என்பது குறித்தெல்லாம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அவர் வாக்குமூலத்தில் குறிப்பிட்ட அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சி.பி.ஐ.முடிவு செய்துள்ளது.