தமிழகத்தில் உள்ள பத்து நகரங்களில் செயல்படுத்த உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான டெண்டருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பத்து நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்தது.
இந்த பத்து நகரங்களில் மின்னணு நிர்வாக வசதியை ஏற்படுத்தவும், மக்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப் வடிவமைப்பதற்கும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது.
100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த டெண்டருக்கு பல்வேறு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. எனினும், லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனத்தைத் தேர்வு செய்ததாகத் தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழக அரசின் இந்த டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான டெண்டர் நடைமுறை வெளிப்படையாக நடைபெறவில்லை என்றும், ஒப்பந்தப் புள்ளிகளின் தொழில்நுட்பத் தகுதி உள்ளிட்ட அம்சங்கள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, இந்த டெண்டர் மீதான மேல் நடவடிக்கைகளை தொடரக் கூடாது என நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக, தமிழக அரசு மற்றும் எல் அண்ட் டி நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.