அமராவதி ஆற்றில் பட்டப்பகலில் மணல் கொள்ளை

அமராவதி ஆற்றில் பட்டப்பகலில் மணல் கொள்ளை

by Rajkumar, Sep 26, 2018, 05:47 AM IST

கரூர் அமராவதி ஆற்றில் காவல்துறை, பொதுபணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை பற்றி எவ்வித அச்சமுமின்றி ஆற்றிலேயே சல்லடை போட்டு சலித்து மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது.

பழனி மலை, ஆனைமலை தொடர்களுக்கு இடையே மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகிறது அமராவதி ஆறு. அங்கிருந்து திருப்பூர், கரூர் மாவட்டங்களை வளப்படுத்தி விட்டு கட்டளை என்ற இடத்தில் அமராவதி ஆறு காவிரி ஆற்றில் கலக்கிறது. 2 மாதங்களுக்கு முன் பெய்த கன மழையால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

தற்போது வெள்ளம் வடிந்து தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தற்போது ஆற்றில் ஏராளமான மணல் திட்டுகள் காட்சி அளிக்கின்றன ஆண்டான்கோவில் அப்பிப்பாளையம், சுக்காளியூர், செல்லான்டிபாளையம், திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றுப்படுகையில் மணல் திட்டுகளில் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த பகுதிகளில் இரவு பகல் வேறுபாடு இன்றி மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. மணல் திருட்டு என்றால் வண்டிகளில் மணலை அள்ளி போட்டு செல்வது அல்ல ஆற்றுப்படுகையிலேயே மிகவும் சாவகாசமாக சல்லடைகளில் வைத்து சலித்து மணலை சேகரித்துக் கொண்டு அதன் பிறகு சலித்த மணல் வண்டிகளில் கொண்டு செல்லப்படுகிறது. 

கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மட்டும் நடந்து வந்த மணல் திருட்டு தற்போது பட்டப் பகலிலும் அரங்கேறுகிறது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
அமராவதி ஆற்றில் மணல் அள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி ஆற்றில் மணல் அள்ளப்பட்டு வருவதை பொதுப்பணி, வருவாய், காவல்துறை அதிகாரிகள் தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். 

மணல் திருட்டு தொடர்ந்தால் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படும் என கரூர் சுற்றுவட்ட பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சுக்களியூர் பாலம் அருகே தொடர்ந்து மணல் அள்ளப்படுவதால் பாலத்தின் தூண்களில் உறுதித்தன்மைக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

எனவே அமராவதி ஆற்றில் அரங்கேறிவரும் மணல் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You'r reading அமராவதி ஆற்றில் பட்டப்பகலில் மணல் கொள்ளை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை