"கல்வி கண் திறந்தவர்" "கர்ம வீரர்" "கிங் மேக்கர்" "படிக்காத மேதை" "கருப்பு காந்தி” எனப் பல்வேறு சிறப்புப் பெயர்களும் புகழும் பெற்ற, இந்த நூற்றாண்டு கண்ட ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் அவர்களின் 43 ஆவது நினைவு தினம் இன்று. மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளன்றே காமராஜரும் மறைந்தார்.
பொது வாழ்வில் நேர்மை என்பது மேடைப்பேச்சில் மட்டும்தான் என்பது எழுதப்படாத வழக்கமாகி விட்ட காலமிது. இன்று காமராஜர் மீண்டும் வரமாட்டார் என ஏங்குவோர் உண்டு அந்த ஒப்பற்ற தலைவர் வாழ்க்கை பற்றி பார்ப்போம்.
காமராஜர் தனது 9 ஆண்டு கால ஆட்சியின்போது தமிழ்நாட்டுக்காக செய்த சாதனைகள் நூறு ஆண்டுகள் பேசும் அளவுக்கு தொலைநோக்கு பார்வையில் செயல்டுத்தியவை.
குறிப்பாக கல்வித்துறைக்கு செய்த அவர் சாதனைகள் எண்ணிலடங்காதவை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்க 30,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடங்கினார்.
இலவச மதிய உணவுத் திட்டம், மாணவர்களுக்கு சீருடை , இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை செயல்படுத்தினார். கல்வித்துறையைப்போல தொழில் துறை மற்றும் வேளாண்துறை சிறக்கவும் பல்வேறு திட்டங்களை செல்படுத்தினார்.
புதிய தொழிற்சாலைகள் நிறுவி மக்களின் பசி, பஞ்சம் போக்க வழிவகை செய்தார். அவர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பாரதி ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், ஏராளமான அணைகள், மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம் என அவரது சாதனைப்பட்டியல் மிகவும் பெரியவை.
தமிழக முதலமைச்சர் பதவி,தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி என அதிகாரமிக்க பதவிகளில் இருந்தாலும், அவர் தமக்காக எந்த சொத்தையும் சேர்க்காமல் தான் காலமானார்.
மக்கள் சேவையே மற்றும் நேர்மையே பெரிது என்று அவர் வாழ்ந்ததால் தான் இன்றும் மக்கள் அவரை போற்றுகிறார்கள்.