தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வடமாநிலங்களை தொடர்ந்து தென்மாநிலங்களிலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, கர்நாடகா, கேரளா மாநிங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலும் பன்றிக்காய்ச்சல் தலைத்தூக்கி உள்ளது. இதனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர், காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார்.
இதன் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பொது மக்கள் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் தாமதிக்காமல் அரசு மருத்துவமனையை அணுகவும். மருத்துவரின் பரிந்துரையின்றி எந்த மருந்தையும் அவர்களாகவே உட்கொள்ளவேண்டாம்.
டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.