ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இன்று முதல் மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.
வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். ஆனால், ஆண்டுக்கு ஆண்டு பயணிகளின் எண்ணிக்கையும், பேருந்தின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதால், மாதவரத்தில் அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த 10ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், இனி புதிதாக கட்டப்பட்டுள்ள மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால், முதற்கட்டமாக இன்று முதல் 42 பேருந்துகள் ஆந்திராவிற்கு இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.