திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவனும் 3 வயது குழந்தையும் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 174 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் அருகிலுள்ள சின்ன எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூ வியாபாரி கணேஷ். இவரது மகன் நிதீஷ்வீரா (7). மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிதீஷ்வீரா திருவள்ளூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். எனினும், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதே போன்று கடம்பத்தூர் பகுதியிலுள்ள அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் கார்த்திக். இவரது 3 வயது மகள் அஸ்விதா. இவரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளாள்.
இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 பேர் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
ஊரப்பாக்கம், ஐயஞ்சேரியை சேர்ந்த செல்வம் என்பவருடைய மகன் விஜய் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அங்கு, கடந்த 4 நாட்கள் அனுமதிக்கப்பட்டு இருந்த விஜய், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையில் 2 நாட்களாக மேல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மாணவன் விஜய் உயிரிழந்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அவர் பார்வையிட்டு, பெற்றோர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், காய்ச்சலுக்காக குழந்தைகளுக்கு மருத்துவர்கள் ஊசி போடக்கூடாது என்று அமைச்சர் கூறினார். மேலும் காய்ச்சல் வந்ததமு உடனே அரசு மருத்துவமனையை அனுகவேண்டும் என்று கூறினார். மேலும் டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து விரிவாக ஆலோசித்தார்.இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்தை பேணும் வகையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் இன்று ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆய்வு செய்கின்றனர்.