தமிழகம் முழுவதும் பேருந்து ஸ்டிரைக் தீவிரம்: பொதுமக்கள் கடும் அவதி

by Isaivaani, Jan 5, 2018, 09:46 AM IST

சென்னை: ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் ஓடாததால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் நேற்று 13வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் நேற்ற பேச்சுவார்ததையில் ஈடுபட்டனர். அப்போது, இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறி நீடித்தது.
பேச்சுவார்த்தை தொடர்பான முடிவு குறித்து பேருந்து ஓட்டுனர்கள், கண்டக்டர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களிடம் விசாரித்துக் கொண்டே இருந்தனர்.

மாலை 6 மணி ஆகியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், விரக்தி அடைந்த ஊழியர்கள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதையடுத்து, ஐயப்பன்தாங்ல், பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பேருந்துகளை நிறுத்தி ஊழியர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். இதேபோல் தமிழகம் முழுவதும் இதே நிலை காணப்பட்டது.
ஆங்காங்கே அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், அலுவலகம் முடிந்து வீடு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே, அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அதிமுக உள்பட 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால், திமுக உள்பட 13 தொழிற்சங்கங்கள் இதனை ஏற்க மறுத்துவிட்டன.

இதனால், திமுக உள்பட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி அதிகாரப்பூர்வ ஸ்டிரைக் அறிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை.

இதனால், வெளியூர் செல்லும் பெரும்பாலான பேருந்துகளும் இரவில் இருந்து நிறுத்தப்பட்டன. பேருந்து இயக்காததால், பெரும்பாலான வெளியூர் செல்ல வேண்டிய மக்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. பேருந்து ஸ்டிரைக் எதிரொலியால், அசம்பாவிதங்களை தடுக்க பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் தீவிரமடைந்துள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

மேலும், இதுதான் நல்ல சமயம் என்று ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மினி வேன் ஆகியோர் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலித்து வருகின்றனர்.

You'r reading தமிழகம் முழுவதும் பேருந்து ஸ்டிரைக் தீவிரம்: பொதுமக்கள் கடும் அவதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை