அரசு போக்குவத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில், திமுக, தொமுச, சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்க நிர்வாகிகள், ”எங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். நடவடிக்கைகளுக்கு எல்லாம் அஞ்சாமல் தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறோம். சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கின்றோம்.
ஒரு போராட்டம் என்றால் அதில் நடவடிக்கை எப்பொழுதும் இருக்கும், அந்த நடவடிக்கை குறித்து நாங்கள் சற்றும் கவலைப்படவில்லை என்பதை தொழிலாளர்கள் உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்ற உத்தரவு நகல் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. நீதிமன்றம் இதுவரை எங்களுடைய கருத்தையும், எங்கள் நீயாயத்தையும் கேட்காமல் ஒரு முடிவை சொன்னால் அது இயற்கை நீதிக்கு விரோதமானது.
அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறதோ இல்லையோ, நிதியை ஒதுக்க வேண்டியது அரசின் கடமை. அப்படி அரசு தன்னால் இயலவில்லை என்று சொன்னால், தாங்கள் பணியை விட்டு செல்ல வேண்டியதுதான்” என்று தெரிவித்தனர்.