இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 286 ரன்களுக்குள் சுருண்டது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால், தொடக்கம் அந்த அணிக்கு சோகமளித்தது.
முதல் ஓவரிலேயே டீன் எல்கர் விக்கெட்டை வீழ்த்தி சரிவை ஏற்படுத்தினார் புவனேஷ்குமார். அதன் பிறகு 12 ரன்களுக்குள் மார்க்ரம் [5], ஹசிம் ஆம்லா [3] என முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ், கேப்டன் ஃபாப் டு பிளஸ்ஸி இணை ஓரளவு சரிவில் இருந்து அணியை மீட்டது. இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது.
அதன் பிறகு டி வில்லியர்ஸ் [65], டு பிளஸ்ஸி [62], குவிண்டன் டி காக் [42] என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ 286 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு அதைவிட பேரதிர்ச்சி காத்திருந்தது. ஐந்தாவது ஓவரின் நான்காவது பந்தில் முரளி விஜய் 1 ரன்னில் வெளியேறி்னார். அடுத்த ஓவரிலேயே ஸ்டெய்ன் பந்தில் ஷிகர் தவான் 16 ரன்னில் அவரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார்.
ஒன்பதாவது ஓவரில் கேப்டன் விராட் கோலி 5 ரன்களில் மோர்னே மோர்கல் பந்தில் வெளியேற முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளுக்கு 28 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.