டெல்டா மாவட்டத்தில் தாக்கிய புயலால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் திவாகரன். ' இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மூன்று தொகுதிகள்தான் நம்முடைய குறி. அதற்கான பணிகளை வேகப்படுத்துங்கள்' எனத் தொண்டர்களிடம் கூறியிருக்கிறார்.
தினகரனோடு மோதல் உருவான பிறகு, ஆளும்கட்சிக்கு ஆதரவான கருத்துக்களைப் பேசி வந்தார் திவாகரன். இதனால் அவருக்கு எதிராக அறிக்கை வெளியிட வேண்டிய சூழலுக்கு ஆளானார் சசிகலா.
இந்த அறிக்கையை எதிர்பார்க்காத திவாகரனும், ' சசிகலா என்னுடைய முன்னாள் சகோதரி' எனப் பேட்டி கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார். இதன்பிறகு அண்ணா திராவிடர் கழகமாக செயல்பட்டு வருகிறார்.
ஆளும் அதிமுக அரசுக்கு ஆதரவாகக் கருத்து கூறினாலும், திவாகரன் தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி எந்த சிக்னலையும் கொடுக்கவில்லை. தகுதிநீக்க வழக்கிலும் அதிமுக அரசுக்கு எதிராகப் பேட்டியளித்திருந்தார் திவாகரன்.
இந்தநிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் மூன்று தொகுதிகளை இலக்காக வைத்துக் காய்களை நகர்த்தி வருகிறார் திவாகரன். தஞ்சை, திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள்தான் அவை.
இந்தத் தொகுதிகளில் சமூகரீதியாக சசிகலா குடும்பத்துக்கு செல்வாக்கு உள்ளது. தஞ்சையில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கிறார் திவாகரன். 'இந்த மூன்று தொகுதிகளிலும் பெறக் கூடிய வாக்குகள், தன்னுடைய செல்வாக்கை அரசுக்கு உணர்த்தும்' என எதிர்பார்க்கிறார் திவாகரன்.
இதையொட்டியே புயல் பாதித்த பகுதியான தஞ்சையில் நிவாரணப் பணிகளில் வேகம் காட்டி வருகிறார். அண்ணா திராவிடர் கழகத்தில் இருக்கும் இளைஞர்களை ஜெய் ஆனந்த் மூலமாகத் திரட்டி, உணவு, உடை, குடிநீர் போன்ற அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறார்.
‘கஜா பாதிப்புக்குப் பிறகு சென்னைக்கு வராமல் டெல்டாவிலேயே முகாமிட்டிருக்கிறார் திவாகரன் மகன்.
இடைத்தேர்தலில் வலு காட்டுவதற்கு இதுபோன்ற களப்பணிகள் உதவும் என நம்புகிறார் திவாகரன். சுந்தரக்கோட்டையில் உள்ள வீடும் கல்லூரியும் சேதமடைந்தாலும் மக்களுக்கான நிவாரணப் பணிகளில் வேகம் காட்டி வருவதற்கு இதுதான் காரணம் என்கின்றனர் அண்ணா திராவிடர் கழகத்தினர்.