தேர்தல் பணிகளில் அதிமுகவினர் காட்டும் வேகம் அளவுக்குத் திமுகவினர் ஈடுபடவில்லை. சீனியர் நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. யார் சொன்னாலும் அதைக் கேட்டு அப்படியே நம்பிவிடுகிறார் ஸ்டாலின். இதனால் பல மாவட்டங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்கின்றனர் திமுக வட்டாரத்தில்.
சட்டமன்றத் தேர்தலில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது தி.மு.க. அந்த ஒரு சதவீத வாக்கு இடைவெளியை வைத்தே ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா.
இதைப் பற்றி அப்போது ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த கருணாநிதி, ' தன்னிடம் இருக்கும் எம்எல்ஏக்களைத் தக்கவைக்க ஜெயலலிதா போராட வேண்டியது இருக்கும்' என்றார். இந்தப் பேட்டியால் கார்டன் வட்டாரம் கொதித்தது.
பின்னர் மரணத்தைத் தழுவினார் ஜெயலலிதா. கருணாநிதிக்கும் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்ததால், திமுக முகாமில் சோர்வு தென்பட்டது.
இதையே காரணமாக வைத்துப் பெரும்பாலான மாவட்டங்களில் அதிமுக மாவட்ட செயலாளர்களோடும் மந்திரிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டனர் திமுக நிர்வாகிகள். அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் பார்களில் மறைமுக கூட்டாளியாக இருக்கின்றனர் திமுகவினர்.
இந்தத் தகவலை அறிந்து கொதிப்படைந்த ஸ்டாலின், தலைவர் சமாதிக்கே இடம் கொடுக்காதவர்களோடு கூட்டணி அமைத்துச் செயல்படுகிறீர்கள். கடும் நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஆனாலும், அவர்களில் பலர் தலைமையைக் கண்டுகொள்வது போலத் தெரியவில்லை.
இந்தக் குழப்ப சூழலைப் பயன்படுத்தி ஆகாதவர்களைக் களையெடுக்கும் வேலைகள் நடந்து வருகின்றன.
தேனி, கம்பம், ராமநாதபுரம், கோவை என பல மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகளைக் கட்டம் கட்டிவிட்டார் ஸ்டாலின்.
ராமநாதபுரத்தில் மாவட்ட செயலாளராக இருந்த திவாகரனைக் கழட்டிவிட்டு, முத்துராமலிங்கம் என்ற நபரைக் கொண்டு வந்தனர். இந்த நபர் யார் என்றே உள்ளூர் கட்சிக்காரர்களுக்குத் தெரியவில்லை.
இந்த நபர் மீதும் கூட்டுறவு சங்கத்தில் இரண்டு கோடி ரூபாய் முறைகேடு செய்த புகார் ஒன்று நிலுவையில் இருக்கிறது. திவாகரன் நீக்கத்தை விரும்பாத ஒன்றிய செயலாளர்கள் தலைமையிடம் நேரடியாகப் புகார் தெரிவித்தனர்.
இந்த கல்தாவை ரசிக்காத திவாகரனின் தந்தையான சுப.தங்கவேலன், ' கலைஞர் வாழ்க எனச் சொல்லிக் கொண்டே காலத்தைக் கடத்திவிட்டோம். இனி மறுபடியும் பதவி வேண்டும் என்றால் கழகத்துக்கு வர வேண்டியதில்லை. எதாவது கார்ப்பரேட் கம்பெனிக்காரன் கால்களில்தான் விழ வேண்டும். கழகம் கார்ப்பரேட் கம்பெனியா மாறிப் போச்சு' என சாபம் விட்டிருக்கிறார்.
இதே மனநிலையில்தான் பல நிர்வாகிகள் இருக்கின்றனர். 'சட்டமன்றத் தேர்தலில் பல மாவட்ட செயலாளர்கள் பகிரங்கமாகவே திமுகவுக்கு எதிராகச் செயல்பட்டனர். நாடாளுமன்றத் தேர்தலிலும் அது தொடரப் போகிறது' என ஆவேசப்படுகின்றனர்.
- அருள் திலீபன்