கஜா புயல் பாதிப்பால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட, மத்திய குழு நேற்றிரவு சென்னை விரைந்தது.
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி ஏற்பட்ட கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்தன. கஜா புயலால் ஏற்பட்ட சூறைக்காற்று, கனமழையில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள், தென்னை மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஒரு சில இடங்களை பார்வையிட்டு திரும்பினார். பின்னர், மரங்கள், கால்நடைகள், உயிரிந்தோருக்கு என தனித்தனியே நிவாரண நிதிகளை அறிவித்தார்.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அதற்காக, 15000 கோடி தேவை என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.
தொடர்ந்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட் பகுதிகளை பார்வையிட மத்திய குழு அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இந்நிலையில், மத்திய குழு நேற்றிரவு சென்னை விரைந்தது. இந்த குழுவில் மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு, நிதித்துறை ஆலோசர் ஆர்.பி.கால், விவசாய கூட்டுறவுத் துறை இயக்குனர் பி.கே.ஹவச்தவா, ஊரக வளர்ச்சி துறை துணை இயக்குனர் மானிக் சந்தரபண்டிட், மின்வாரிய முதன்மை என்ஜினீயர் வந்தனா சிங்கால், நீர்வளத்துறை இயக்குனர் ஹர்ஷா, நெடுஞ்சாலை, போக்குவரத்து கண்காணிப்பு என்ஜினீயர் இளவரசன் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள், இன்று காலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள்-அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளனர். இதன்பிறகு, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலேசனை நடத்தி பிறகு, 2 பிரிவாக திருச்சி சென்று புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 3 நாட்கள் சேதங்களை மதிப்பீடு செய்கின்றனர். ஆய்வு முடித்து வரும் 27ம் தேதி சென்னை திரும்பும் குழுவினர் மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு டெல்லி புயப்படுகின்றனர்.