ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேர்தல் தொடர்பான கூட்டணிகளை முடிவு செய்ய இருக்கிறார் மோடி. 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல தமிழகத்தில் கூட்டணி அமையாது என அறிந்து வைத்திருக்கிறார் மோடி. இருப்பினும், நல்ல கூட்டணியை அமைப்பது தொடர்பான பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன' என்கின்றனர் பிஜேபி பொறுப்பாளர்கள்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைகிறது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை உள்ள நிலையில் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.
எனவே 4 மாநில தேர்தலுடன் தெலங்கானாவுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட உள்ளது. நவம்பர் 12 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வரையில் தேர்தல் நடக்க இருக்கிறது. அதாவது, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஐந்து மாநிலங்களிலும் டிசம்பர் 11 அன்று வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
தேர்தல் குறித்துப் பேசும் பிஜேபி பொறுப்பாளர்கள், ' ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை வாழ்வா...சாவா போராட்டமாகப் பார்க்கிறார் மோடி. நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில், 5 மாநிலத் தேர்தல் முடிவுகளை மக்கள் கவனிப்பார்கள் என நம்புகிறார். அதிலும், தமிழகத்தில் பிஜேபியுடன் கூட்டணி சேருவதற்கு எடப்பாடியே தயக்கம் காட்டித்தான் வந்தார். தொடர்ச்சியான ரெய்டுகளும் அவரது சம்பந்திக்குக் கிடைத்த சிறப்பான கவனிப்பும், எடப்பாடி மனதை திசைதிருப்பியது.
இதையடுத்து, ராஜ்யசபா தலைவர் தேர்தலுக்கு மோடி கேட்காமலேயே ஆதரவு கொடுத்தது அதிமுக. கூட்டணியே இல்லாத பிஜேபிக்கு அதிமுகவை விட்டால் வேறு வழியில்லை. ஆனால், இரண்டு தரப்பிலும் கூட்டணியை உறுதிப்படுத்தாமல் அமைதி காத்து வருகின்றனர். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எடப்பாடிக்கும் மோடிக்கும் இடையில் கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து வருகிறது. 5 மாநில தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகே, அனைத்தும் முடிவாகும்' என்கின்றனர்.
-அருள் திலீபன்