ஏமாற்றம் அளிக்கும் ஆளுநர் உரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

by Isaivaani, Jan 8, 2018, 20:58 PM IST
சென்னை: இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக ஆளுநரின் உரை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சி சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட 2018-19க்கான தமிழக ஆளுநரின் உரை, தமிழக மக்களின் தற்போது அதிகரித்து வரும் ஏராளமான பிரச்சனைகளுக்கு எவ்வித தீர்வும் அளிக்காமல் மக்களை ஏமாற்றும் விதத்திலேயே  அமைந்துள்ளது.
பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஒகி புயல், வறட்சி மற்றும் வெள்ளம் என தொடர்ந்து தமிழகம் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது.  பருவ நிலை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இவ்வாறு மக்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு எவ்வித நிவாரணமோ, மாற்று திட்டங்களோ இந்த ஆளுநர் உரையில் எதுவும் கூறப்படவில்லை என்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
சமீபத்தில் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை சமுதாயத்தின் அனைத்து பகுதியினரையும் பாதித்த நிலையில், மத்திய அரசின் முறைகேடான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு கொள்கை, சிறு வியாபாரிகள், சிறு தொழில் முனைவோர் மற்றும் சாதாரண மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் ஆளுநர் உரையில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை சிரமமின்றி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழகத்திலும், நாடு முழுவதிலும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிராக வணிகர்கள், சிறு குறு தொழில் முனைவர் எழுப்பிய கண்டன குரல்களை இது பிரதிலிப்பதாக இல்லை.
மத்திய மாநில அரசுகளின் வரிவருவாய் பகிர்வின் காரணமாக தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ. 6000 கோடி குறைந்து உள்ளது என்பதை ஆளுநர் அறிக்கை தெரிவித்துள்ள போதிலும், அது குறித்து கண்டனமோ அல்லது வருவாய் இழப்பீட்டை சரிகட்ட மத்திய அரசிடம் எத்தகைய அணுகுமுறையை கையாள்வது என்பது பற்றிய கருத்தோ இந்த உரையில் இல்லை. கடந்த ஆண்டே நிதிப்பகிர்வில் தமிழகம் மிக மோசமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியிருந்தது; இந்த ஆண்டும் அது தொடர்கிறது. 
தமிழகத்தில் விவசாயிகள் பிரச்சனை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.   200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  ஆளுநர் உரையில் விவசாயிகள் பிரச்சனைக்கு போதுமான நிவாரணம் அளிக்கும் வகையிலான எவ்வித திட்டமும் இல்லை. அல்லலுறும் விவசாயிகள் குறித்து எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை. காயும் பயிரைக் காப்பாற்ற கர்நாடக மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றுத்தர மாநில அரசு எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறது என்பது குறித்து ஆளுநர் அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இல்லாததும் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. 
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த 2015-16 ஆண்டில் 4.52 பில்லியன் டாலராக இருந்த நேரடி அந்நிய முதலீடு இந்த ஆண்டு (2016-17) 2.21 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. சிறு, குறு தொழில்கள் பலவும் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரியால் மூடப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்து கொண்டே வருகிறது. ஆளுநர் உரையில் தொழில் வளர்ச்சி பற்றி எவ்வித அக்கறையும் காணப்படவில்லை. 
தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என மத்திய மாநில அரசுகள் உறுதியளித்த போதிலும், சமீப கால நடவடிக்கைகள் மேலும், மேலும் மீனவர் பிரச்சனை அதிகரித்து வருவதையே வெளிப்படுத்துகிறது. ஆளுநர் உரையில் தமிழக மீனவர் பிரச்சனைகள் குறித்து எவ்வித தீர்வும் குறிப்பிடப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது என்பதை அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது போல் ஆளுநர் உரை தெரிவிப்பது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர். அவர்களுடைய கோரிக்கைகளுக்கான எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இடம்பெறாதது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல அரசு ஊழியர் - ஆசிரியர்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் கோரிக்கைகளுக்கும் எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 89 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு அது ஒரு கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லை என்பது வேலையில்லாத இளைஞர்கள் மத்தியில் பெரும் சோர்வையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில் இந்த ஆளுநர் உரை பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு சுட்டிக்காட்டி விரும்புகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

You'r reading ஏமாற்றம் அளிக்கும் ஆளுநர் உரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை