வடதமிழகத்தை தங்களது கோட்டையாக கருதி வரும் பாமகவுக்கு செக் வைக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் கை கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில்தான் இருப்போம் என அடித்து சொல்கிறது திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. திமுகவோ விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களது தற்போதைய கஸ்டமர் இல்லை என்கிறது.
அதே நேரத்தில் தினகரனுடன் கூட்டணி அமைப்பதில் உறுதியாக இருக்கிறது பாமக. இது தொடர்பாக புதுவையில் தினகரனை புதுவையில் அன்புமணி ராமதாஸ் ரகசியமாக சந்தித்து பேசியதை நமது செய்திதளம் வெளிப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் பண்ருட்டி வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சியும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வட தமிழகத்தில் கை கோர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாமகவில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கிய வேல்முருகன் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பை ஏற்படுத்தி அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள், தமிழர் இயக்கங்கள் என பலவற்றை ஒருங்கிணைத்தும் வந்தார். இந்த கூட்டமைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பட்டும் படாமல் இருந்து வந்தது.
அண்மையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கிய சைக்கிள் பயணத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி நடத்தியது. இதன் நிறைவு நிகழ்ச்சியில் திருமாவளவனும் கலந்து கொண்டார்.
இதையடுத்தே வேல்முருகன் - திருமாவளவன் கூட்டணிக்கான வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. திமுகவுக்கு வட தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதை சிதைக்கும் வகையில்தான் திருமாவளவனும் வேல்முருகனும் கை கோர்க்க இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.