பிரபாகரன் பாணியில் சீமான் வெளியிட்ட மாவீரர் நாள் அறிக்கை

Seeman Statement on Maveerar Naal

by Mathivanan, Nov 27, 2018, 08:26 AM IST

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாணியில் மாவீரர் நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனித்தமிழ் ஈழ சோசலிச குடியரசு நாட்டிற்காக.. மாவீரர்களின் புனிதக் கனவினை நிறைவேற்ற அணியமாகுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

சீமான் வெளியிட்ட மாவீரர் நாள் அறிக்கை:

உலகம் முழுக்க பரந்து வாழும் எம் தாய்த்தமிழ் உறவுகளுக்கு.. வணக்கம்..!

இன்று மாவீரர் நாள்.

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் காந்தள் பூ மலரும் காலம் தமிழினம் தன் இனத்திற்காக, தன் தாய் நாட்டிற்காக.. உயிர் துறந்த மாவீரர்களை நெஞ்சம் நெகிழ நினைவு கூர்கின்றது.

எம் மாவீரர்கள் சாதாரணமான மனிதர்களாக பிறந்திருந்தாலும் அவர்களது மரணம் வீர சரித்திரமாக உலக வரலாற்றின் புனிதப்பக்கங்களில் பதிந்திருக்கிறது. சொல்லுக்கும், செயலுக்கும் இடைவெளியற்ற ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்த நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் கட்டளைக்கிணங்க தம்மக்கள் காக்க, தாய் நிலம் காக்க, தன்னலம் தவிர்த்து, உயிரை விதையாக விதைத்து, விடுதலையைப் பெறத் தன்னுயிரைத் தந்தவர்கள் எம் மாவீரர்கள்.

இந்த மானுடச் சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே தோன்றிய முதல் மொழி நம் தாய் மொழி தமிழ் ஆகும். நதிக்கரைகளே நாகரிகத்தின் தொட்டில்கள் என்றழைக்கப்பட்ட அந்த பழம் பெரும் காலத்திலேயே பண்பாடு,கலை, இலக்கியம், மொழி, வேளாண்மை,வாழ்வியல், அறிவியல், அறவியல் என அனைத்திலும் மேம்பட்ட இனமாக நம் தமிழினம் விளங்கியது.

உலகமெல்லாம் படையெடுத்து தன் கொடி நட்டு இந்த உலகத்தைத் தனது உள்ளங்காலுக்குக் கீழே கொண்டு வந்து பெருமைப்பட்ட தமிழனுக்கு இன்றைய நாளிலே உள்ளங்கை அளவிற்குக் கூட ஒரு நாடில்லை என்பதுதான் நம் உயிரை உலுக்குகிற வேதனை. அந்த வேதனையை தீர்ப்பதற்காகத்தான், ஒரு தேசிய இனம் ஒடுக்கப்பட்டு நாடில்லாமல் நாதியற்ற இனமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத் தான் தன்னையே கொடுத்து தாய்நாட்டின் விடுதலைக்காகப் புகழ் உரு அடைந்தார்கள் எம் மாவீரர்கள்.

எமக்கென்று ஒரு தாய் மொழி இருக்கிறது.. எமக்கென்று ஒரு நிலம் இருக்கிறது.. எமக்கென்று தனித்தே கலை பண்பாட்டு விழுமியங்கள் இருக்கின்றன. எமக்கென்று வேளாண்மை சார்ந்தும்,கால்நடைகள் சார்ந்தும் ஏற்படுகிற பொருளாதார அம்சங்கள் எம் வாழ்விலே பொதிந்திருக்கின்றன. இவ்வளவு இருந்தும் எமக்கென்று உள்ளங்கை அளவிற்குக் கூட ஒரு தேசம் இல்லையே என்கின்ற ஏக்கம்.12 கோடி தமிழ்த் தேசிய இனத்திற்கும் பெரும் தாகமாய் கனன்று வருகிறது.

அந்த தாயக விடுதலைத் தாகத்தைத் தணித்திடவே தியாகத்தின் பெருமழை என தன் உயிரையே மழையாய் பொழிந்து விடுதலைப் பயிரை அறுவடை செய்ய துணிந்தனர் எம் மாவீரர்கள். ஒரு தேசிய இனம் என்றைக்குத் தனக்கென ஒரு தேசம் அடைகின்றதோ அன்றைக்குத்தான் அது ஒரு முழுமையான தேசிய இனம் என்கின்ற தகுதியை எட்டும் என்கிறார்கள் அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள். அந்தத் தேசத்தை அடைவதற்காகதான் தன் உயிரையும் ,உடலையும் விடுதலையின் விலையாக கொடுத்தவர்கள் எம் மாவீரர்கள்.

இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு விடுதலை இயக்கமும் பிற நாடுகளின் உதவியுடன் அல்லது பல்வேறு சக்திகளின் ஊக்கத்துடன் போராடி விடுதலையை வென்றெடுப்பதைதான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் நம் தாய் நிலத்து விடுதலைப்புலிகளோ பிறர் உதவியின்றி தனது சொந்த மக்களையே ஒரு படையாகக் கட்டி இந்த உலகத்தின் வல்லாதிக்கங்களை சமரசமின்றி எதிர்த்து நின்று தமிழனின் வீரத்தைத் தரணிக்குப் பறைசாற்றினர்.

எம் தாய் நிலத்தைச் சூறையாட, எம் விடுதலைப் போராட்டத்தை முடக்கிப்போட பெரும் பெரும் நாடுகள் கூட்டாக நின்ற போதும் தாயக விடுதலை என்ற ஒற்றைக் காரணத்திற்காகத் துஞ்சாது உயிரைக் கொடுக்க வரிசையில் நின்றார்கள் எம் மாவீரர்கள். எமது போர் என்பது சிங்கள வல்லாதிக்கத்திற்கு எதிரானதே ஒழிய ஒரு போதும் அப்பாவி சிங்களர்களுக்கு எதிரானது அல்ல. என்று அறம் வழி நின்று போர் செய்த என் உயிர் அண்ணன், எம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வழியில் நின்று இறுதிவரை மக்களைக் காக்க களத்திலே காவல் தெய்வங்களாக நின்றவர்கள் எம் மாவீரர்கள்.

போர் முடிந்து ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இன்னமும் எம் இனம் அழிக்கப்பட்டதற்கான, போர்ச்சூழலில் காணாமல் போன எம் உறவுகள் குறித்த நியாயம் இதுவரை எமக்குக் கிடைத்த பாடில்லை. இன்னமும் சொந்த நிலத்தில் அகதிகளாக என் தாய்த்தமிழ் உறவுகள் ஈழப் பெரு நிலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற கொடுமை முடியவில்லை. சர்வதேச மன்றங்களில் நாம் முறையிட்டும் நம் மீது நிகழ்ந்த இனப்படுகொலைக்கான நீதி இன்னமும் கிடைத்தபாடில்லை.

எம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் அமைத்திருந்த தனி தமிழ் ஈழ சோசலிசக் குடியரசு உலக நாடுகளுக்கு உதாரணமாக விளங்கியது. இம்மண்ணில் காலம் காலமாய் தொன்று தொட்டு முழங்கி வரும் சாதி ஒழிப்பு என்கின்ற மகத்தான கனவினை எம் தேசியத் தலைவர் எம் தாய் நிலமான ஈழத்தில் சாதித்துக் காட்டினார்.

இந்த உலகமே எதிர்த்து நின்று போராடினாலும் எம் தலைவர் கட்டியெழுப்பிய தனித் தமிழ் ஈழ சோசலிசக் குடியரசில் எம் தாய்த்தமிழ் உறவுகள் ஒரு தன்னிறைவான வாழ்க்கையே வாழ்ந்தார்கள். இந்த உலகில் வாழும் எல்லாத் தேசிய இனங்களைப் போல நாமும் சுதந்திரமாய் வாழ, சகல விதமான உரிமைகளோடு பிழைக்க, அது உள்ளங்கையளவு என்றாலும், ஒரு தனி நாடு என்கின்ற மாபெரும் இலட்சியத்திற்காகத் தான் நம் மாவீரர்கள் இறுதிவரை போராடினார்கள்.

இத்தனை வீரமும் தியாகமும் விதைக்கப்படும் தாய்நிலம் இன்னமும் சிங்களப் பேரினவாதத்தின் கரங்களில் சிக்குண்டு கிடப்பது என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் சகிக்கமுடியாத துயராக நீண்டு வருகிறது. இந்தப் புத்துயுகத்தில் பிறந்த பல்வேறு நாடுகள் போல நம் தாய் நிலமும் ஒரு நாள் நியாயமான ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் தனிநாடாக மலராதா என்கின்ற கனவு ஒவ்வொரு தமிழனுக்கும் ஆழ்மனதில் உயிர்த் துடிப்பாய் துடித்து வருகிறது.

ஆனால் நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியையும் சிங்களப் பேரினவாத அரசு வல்லாதிக்க நாடுகளோடு கூட்டு வைத்துக் கொண்டு முறியடிக்க முயன்று வருகிறது. நம் தாயக விடுதலைக்காகத் தன்னுயிர் தந்த தங்கங்களான நமது மாவீரர் தெய்வங்களை நினைவுகூரும் இந்த தியாகத் திருநாளில் நம் தாயக விடுதலைக்காக ஒவ்வொரு தமிழனும் தனக்குள் உறுதியேற்றிக்கொள்ள வேண்டும்.

நம் மாவீரர்கள் சிந்திய குருதி ஒரு போதும் வீணாக நம் உயிர் உள்ளவரை விடக்கூடாது. ஈழம் மலரும் காலம் வரை நமது விடுதலைப் போராட்டமும் ஓயப்போவதில்லை. நமது சுதந்திர தாகமும் ஆறப்போவதில்லை. இன்று ஈழ விடுதலைப் போராட்டம் என்பது அரசியல் போராட்டமாக ஒவ்வொரு தமிழனின் கரங்களுக்கும் கையளிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழர் என்கின்ற இன உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சாதி,மத பேதங்களைக் கடந்த ஒரு மகத்தான பெரும் அரசியல் வெற்றியே ஈழவிடுதலையைச் சாத்தியப்படுத்தும் என்கின்ற புரிதல் உலகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தனித் தமிழீழம் என்கின்ற மகத்தான கனவு நிறைவேற தாயகத் தமிழகத்தில் ஒரு அரசியல் மாறுதல் தேவை என்கிற காலத்தின் கட்டாயம் தமிழின இளைஞர்களை ஒரு பெருந்திரள் அரசியலைத் தாங்களாகக் கட்டமைக்கத் தூண்டியிருக்கிறது.

தன் இன பகை உணர்ச்சிகளான சாதி,மத உணர்ச்சியை சாகடித்து தமிழர்கள் இன்று தாயக விடுதலை என்கின்ற மகத்தான கனவோடு துளித்துளியாய் இணைந்து அணியமாகி வருகிறார்கள். இந்த மகத்தான அரசியல் சிந்தனை மாறுதல் போக்கினை உலகத் தமிழர்களும் தாயகத் தமிழர்களும் புரிந்துகொண்டு மாவீரர் கனவை நிறைவேற்ற நாம் தமிழர் என்கின்ற ஒற்றைப்புள்ளியில் இணைய வேண்டியதே மாவீரர்கள் செய்த தியாகத்திற்கு இன்றைய அரசியல் சூழலில் நாம் செய்கின்ற நேர்மையாகும்.

இந்த மாவீரர் நாளில் உலகத்தின் அரசியல் போக்குகளை உன்னிப்பாகக் கவனித்து நமது தாயக விடுதலைக்காக.. தனித்தமிழ் சோசலிச குடியரசு நாட்டிற்காக.. மாவீரர்களின் புனிதக் கனவினை நிறைவேற்ற அணியமாகுவோம் நான் பெரிது, நீ பெரிது என்பதைவிட நாடு பெரிது; அதன் விடுதலை பெரிது எனும் தலைவரின் உயிர் மொழிகளுக்கு ஏற்ப, அகந்தையை அறவே ஒழித்து, பணம், பதவி, புகழ், போதை போன்ற எவற்றிற்கும் அடிமையாகாது, கொண்ட கொள்கைக்காகவும், ஏற்ற இலட்சியத்திற்காகவும் அர்ப்பணித்து இனத்தின் விடுதலை எனும் புனிதக்கனவைத் தூக்கிச் சுமக்க நம் மாவீரர் தெய்வங்கள் மீது ஆணையிட்டு உறுதியேற்போம்.

மாவீரர்களின் ஈகம் வெல்லட்டும்! மாவீரர்களின் ஆன்மா எங்களை வழிநடத்தட்டும்! தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

You'r reading பிரபாகரன் பாணியில் சீமான் வெளியிட்ட மாவீரர் நாள் அறிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை