திமுக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறி அதிமுக பக்கம் செல்வது உறுதியாகிவிட்டது. ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் என கூறிவந்த வைகோ திடீரென கூட்டணியை விட்டு வெளியேறியதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
2014 லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து மதிமுக போட்டியிட்டது. அக்கூட்டணியில் மதிமுகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மதிமுக எந்த ஒரு தொகுதியிலும் போணியாகவில்லை.
பிரதமராக மோடி பதவி ஏற்ற போது இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தினார் வைகோ. அதேவேகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் மதிமுக வெளியேறியது.
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராக முழங்கி வரும் வைகோ திமுகவை பாதுகாப்பேன் என சூளுரைத்து வந்தார். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என சபதம் போட்டார்.
இந்த பின்னணியில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகளும் தொடங்கின. மதிமுக தரப்பில் மொத்தம் 4 தொகுதிகள் கேட்கப்பட்டன. மதிமுகவின் இந்த கோரிக்கை குறித்து அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது பேசிய துரைமுருகன், மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் திமுக, அதிமுக என தாவிவிட்டனர். வைகோவுக்கு மரியாதை தரும் வகையில் அவர் விரும்புகிற தொகுதியில் போட்டியிடட்டும். அவருக்காக ஒரெ ஒரு தொகுதி ஒதுக்கலாம் என கூறியிருக்கிறார். துரைமுருகனின் இந்த கருத்தையே ஸ்டாலின் உள்ளிட்டோரும் ஆமோதித்துள்ளனர்.
இத்தகவல் வைகோவுக்கு பாஸ் செய்யப்பட அதிர்ந்து போனாராம். 4 தொகுதிகள் கேட்டால் 2-வது கொடுப்பார்கள் என கருதினேன். இப்ப ஒரு தொகுதிதான் என கூறுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. என்னுடன் இத்தனை காலம் பயணித்த 2 பேருக்காவது சீட் கிடைக்க வேண்டாமா? என கொந்தளித்திருக்கிறார்.
ஆனால் வைகோவின் 2 தொகுதி ஆப்சன் குறித்து திமுக எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது. இதுதான் வைகோவுக்கு வருத்தத்தைத் தந்ததாம்.
இதனைத் தொடர்ந்துதான் கஜா புயல் விவகாரத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு புகழாரம் சூட்டினார் வைகோ. அவரது ‘அங்கிட்டு இங்கிட்டு’ இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் மதிமுக கூட்டணியிலேயே இல்லை என ஒரே போடாக போட்டுவிட்டதாம் திமுக.
- எழில் பிரதீபன்