கஜா புயலால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ரயில் மூலம் சென்று அங்குள்ள மக்களுக்கு முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த 15ம் தேதி உருவெடுத்த கஜா புயல், கடந்த 16ம் தேதி கரையை கடந்து நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில், வீடுகளையும், விவசாயத்தையும் இழந்து மக்கள் கடும் வேதனையில் உள்ளனர். புயல் கரையை கடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளனர்.
இதையடுத்து, கடந்த 20ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
குறிப்பாக, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பிறகு, முதல்வரின் பயண திட்டம் பாதியில் ரத்தானது.
பின்னர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிடும் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு ரயில் மூலம் நாகை புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரயில் மூலம் நாகைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வந்தடைந்தார். இங்கு, அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.
பின்னர், நாகை ஊராட்சி ஒன்றி அலுவலகத்தில் புயலால் பாதித்த மக்களுக்கு முதற்கட்டமாக நிவாரணப் பொருட்களையும், நிதியுதவிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, திருவாரூரில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை முதல்வர் பார்வையிடுகிறார். பின்னர், இன்று இரவு திருவாரூரில் இருந்து ரயில் மூலம் சென்னை திரும்புகிறார்.