திமுகவின் தோழமைக் கட்சிகளுடன் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலுவைக் கைகாட்டுகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள். வடமாவட்டத்தில் வன்னிய வாக்குகளைக் கவர்வதற்காகச் செய்யப்பட்ட ராஜதந்திரம் இது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
மக்கள் நலக் கூட்டணியாக தேர்தலைச் சந்தித்த திருமாவளவனையும் வைகோவையும் கூட்டணியில் இருந்து கழட்டிவிடுவதற்கு நேரம் பார்த்துக் காத்திருந்தனர் எ.வ.வேலுவும் துரைமுருகனும். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 'சட்டமன்றத் தேர்தலின்போது எங்கள் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இருந்தது.
விடுதலைச் சிறுத்தைகளும் மதிமுகவும் கொள்கைரீதியாக எங்களுடன் ஒத்துப்போனாலும் அவர்கள் கூட்டணியில் இல்லை. அவர்கள் எங்களின் தோழமைக் கட்சிகள்' எனக் கூறியிருந்தார் துரைமுருகன். 'கூட்டணியில் திருமாவும் வைகோவும் இல்லை' எனப் பொருள்படியாக இந்தப் பேட்டி அமைந்துவிட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வைகோ, 'கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமோ என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்' எனக் கூறியிருந்தார். இதன் அடுத்தகட்டமாக, நேற்று திமுக தலைமைக் கழகத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேசி, ராசியாகிவிட்டார் திருமாவளவன்.
ஆனாலும், விடுதலைச் சிறுத்தைகள் மத்தியில் உள்ள பொருமல் அகலவில்லை. இதைப் பற்றிப் பேசும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள், ' திமுகவை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார் எ.வ.வேலு. இவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறுத்தைகளை இடைஞ்சலாகப் பார்க்கின்றனர். நம்ம கூட்டணியில் தலித் கட்சிகளே இருக்கக் கூடாது எனத் திட்டம் வகுத்துள்ளனர்.
எங்களைப் புறக்கணித்துவிட்டால், வன்னிய வாக்குகள் தங்களுக்கே வந்து சேரும் என நினைக்கின்றனர். பாமக வந்தால்கூட பரவாயில்லை. திருமாவளவனை சேர்த்துக் கொள்ளக் கூடாது என ஸ்டாலின் குடும்பத்தினருக்கு இவர்கள் தூபம் போட்டுள்ளனர்.
வேலு சொல்வதைத்தான் சபரீசன் கேட்பார். தினந்தோறும் 15 மாவட்ட செயலாளர்களையாவது வேலு வீட்டில் பார்க்கலாம். கழகத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறார். அதனால்தான், திருமாவளவன் மனம் புண்படும்படியான பேச்சுக்களை திமுகவில் உள்ள சிலர் பேசத் தொடங்கினார்கள்.
அவர்கள் நினைத்ததுபோலவே, கூட்டணிக்குள் குண்டு வீசிவிட்டார்கள்.
இதன் விளைவுகளைப் பற்றி, ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லக் கூடியவர்கள் விவாதித்துள்ளனர். இதனை ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். ' திருமாவளவனைக் கழட்டிவிட்டால், அவர் அதிமுக, தினகரன் என எங்காவது சென்று விடுவார். ஒரு சில இடங்களைக் கொடுப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. மோடிக்கு எதிராகப் பேசுவதற்கு திருமாவளவன் போன்றவர்கள் தேவை. அவரை அழைத்துப் பேசுவதே நல்லது' எனக் கூறியுள்ளனர்.
இந்த சமசர சந்திப்பை எ.வ.வேலு விரும்பவில்லை. அடுத்த குண்டை வீசுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்' எனக் கூறுகின்றனர்.
- அருள் திலீபன்