நடிகை காயத்ரி ரகுராம், தமிழிசை சண்டை வீதிக்கு வந்துவிட்டது. 'காயத்ரி பாஜகவில் இல்லை' எனத் தமிழிசை கூற, 'எல்லோர் எதிர்காலத்தையும் உங்களால் நிர்ணயித்துவிட முடியாது' என ஆத்திரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் காயத்ரி.
சென்னையில் குடிபோதையில் தாறுமாறாகக் கார் ஓட்டியதாகப் பிடிபட்டார் நடிகை காயத்ரி. இந்த சம்பவத்தில் அவர் அபராதம் செலுத்தியதாகவும் தகவல் வந்திருந்தது.
இந்த சூழ்நிலையில், 'காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை' என அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார். இதனை எதிர்பார்க்காத காயத்ரியோ, ' அன்புள்ள தமிழிசை மேடம். நான் பாஜகவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது ஒரு கணினி வாயிலாக. நீங்களாகவே யாரையும் கட்சியில் சேர்க்கவோ விலக்கவோ இயலாது. இது ஒரு தேசியக் கட்சி. இரண்டாவதாக தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா என்ன? நான் இங்கிருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. உங்கள் கட்சியிலிருந்து உறுப்பினர்களை விரட்டுவதை விட்டுவிட்டு ஆள் சேர்க்கப் பாருங்கள். உங்களுக்கு யாரை சேர்க்க வேண்டும் நீக்க வேண்டும் என்று சொல்லும் அதிகாரம் இல்லை.
நீங்கள் தமிழக பாஜகவின் தலைவர் மட்டும்தான். நீங்களே எல்லா எதிர்காலத்தையும் நிர்ணயித்துவிட முடியாது. தமிழக பாஜகவில் இருந்து கொண்டு பிரச்சினைகளை சந்திப்பதைவிட அதிலிருந்து நான் விலகியே இருக்கிறேன்' எனக் கூறியிருந்தார்.
இதற்கு முன்னதாக, தமிழக பாஜகவில் நிலவும் உள்கட்சி குழப்பம் குறித்தும் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது. எனது புகழைப் பார்த்து அவர்கள் அச்சத்துடனும் கலக்கத்துடனும் உள்ளனர்.
இந்தப் பருந்துகளால் நான் பந்தாடப்படுகிறேன். என் மீது களங்கம் சுமத்தும் வகையில் சிலருக்கு கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது. நான் சமீபகாலமாக பாஜகவில் சுறுசுறுப்பாக இயங்கவில்லை. ஆனாலும் சில இளம் மனதுகள் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த தந்திரங்களில் ஈடுபடுகின்றன. இளந்தலைவர்களுக்கு வாழ்த்துகள்' எனக் கூறியிருந்தார்.
காயத்ரி குறிப்பிடுவது தமிழக பாஜக இளைஞரணித் தலைவரான வினோஜ் பி.செல்வம் என்பவரைப் பற்றித்தான் என்கின்றனர் தாமரைக் கட்சி பொறுப்பாளர்கள். ' தமிழிசை அதிகாரத்துக்குள் வந்தவுடன் வினோஜும் பதவிக்கு வந்துவிட்டார். அவர் வந்த பிறகுதான் கட்சி நிர்வாகிகளை பார்ட்டி கலாசாரத்துக்கு உட்படுத்தினார்.
அதற்கு முன்னர் எல்லாம், கட்டுப்பாடான கட்சி, ஆர்.எஸ்.எஸ் வழித்தோன்றல்கள் என்றெல்லாம் பேசி வந்தனர். வினோஜ் வந்த பிறகு கட்சியே கார்ப்பரேட் ஆக மாறிவிட்டது. யுவ மோர்ச்சாவில் அவர் வைத்ததுதான் சட்டம். இதனை மீறுகிறவர்கள் அனைவரும் கட்சியை விட்டே நீக்கப்படுவார்கள் அல்லது அவமானப்படுத்தப்படுவார்கள். மெர்சல் விவகாரத்தில் வினோஜ் மறைமுக தயாரிப்பாளர் என திரையுலக வட்டாரத்தில் பேசி வந்தனர்.
அவருக்கு ஏன் தமிழிசை முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை ஆராய்ந்தால், பல விஷயங்கள் வெளியில் வரும்' எனக் கிசுகிசுக்கின்றனர்.
- அருள் திலீபன்