லோக்சபா தேர்தலில் மதிமுகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கலாம் என திமுக முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் ஓரிரு சீட்டுகளைக் கொடுத்து வைகோவைப் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் எனத் திட்டம் தீட்டியிருக்கிறார் ஸ்டாலின். கருணாநிதியைப் பற்றி உருக்கமாகப் பேசி வாக்குகளைப் பெறுவதற்கு அவர் அவசியம் எனக் கருதுகிறார்களாம் ஸ்டாலின் குடும்பத்தார்.
'குஜராத்தைப் போலவே நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு மோடி அவசியம்' என 2014 தேர்தலில் ஊரெல்லாம் பேசி வாக்கு சேகரித்தார் வைகோ. அந்த தேர்தலில் பொன்னாரும் அன்புமணியும் மட்டுமே வென்றனர்.
வைகோ கட்சிக்குப் படுதோல்வி கிடைத்தது. இதன்பிறகு மக்கள் நலக் கூட்டணியாக அவதாரம் எடுத்தார். கூட்டணிக்கு வராமல் திமுக பக்கம் தூதுவிட்டுக் கொண்டிருந்த கேப்டனைத் தொழிலதிபர்கள் மூலமாக ம.ந.கூவுக்குக் கொண்டு வந்தார்.
தேர்தல் பிரசார நேரத்தில் வைகோ அடித்த ஸ்டண்டுகளும் பச்சைக் கலர் துண்டின் மர்மமும் பிடிபடாமல் தவித்தனர் காம்ரேடுகள். தேர்தல் ரிசல்ட்டில் ம.ந.கூவை மக்கள் அங்கீகரிக்கவில்லை.
இதன்பிறகு கொள்கை அடிப்படையில் போராட்டங்களில் பங்கேற்போம். தேர்தல் கால கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது என ஒதுங்கிக் கொண்டார் கேப்டன். ஜி.கே.வாசனும் வெறுத்துப் போய்விட்டார்.
இப்போது, ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்ற கோஷத்தைக் கையில் ஏந்தத் தொடங்கிவிட்டார் வைகோ. இதைப் பற்றிப் பேசும் திமுக பொறுப்பாளர்கள், ' கருணாநிதி இல்லாமல் ஆர்.கே.நகர் தேர்தலை எதிர்கொண்டார் ஸ்டாலின். அங்கு டெபாசிட் பறிபோனதில் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.
இப்போது மீண்டும் ஒரு பிரமாண்ட வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காக கூட்டணிக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்கிறார் ஸ்டாலின். கருணாநிதி இல்லாமல் களத்தை அணுகுவதால் வைகோ போன்ற பிரசார பீரங்கிகள் அவசியம் என நினைக்கிறார். ஏற்கெனவே பொள்ளாச்சி தொகுதியில் இரண்டு முறை மதிமுக வெற்றி பெற்றிருந்தது.
இந்தமுறை கோவை வட்டாரத்தில் ஒரு சீட்டும் தென் மாவட்டத்தில் ஒரு சீட்டும் என இரண்டு சீட்டுகளை ஒதுக்கலாம். அப்படிச் செய்தால் மாநிலம் முழுக்க வைகோவின் பிரசாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டு சீட்டுகளுக்கு மேல் அவர்களுக்குத் தகுதியில்லை' என நினைக்கிறார் ஸ்டாலின்.
ஸ்டாலின் குடும்பத்தாரும், 'கருணாநிதி அனுதாபத்தை வாக்குகளாகப் பெறுவதற்கும் அவரைப் பற்றிப் பேசுவதற்கும் இவரைவிட்டால் வேறு யாரும் கிடையாது. அதனால் வைகோவைக் கஷ்டப்படுத்தும்விதமாக எதுவும் பேச வேண்டாம்' என உ.பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்களாம்.
-அருள் திலீபன்