"இந்திய அணியில் ரோஹித் சர்மா வுக்கு இடம் அளிக்கவிட்டால் தான் ஆஸ்திரேலியா அணியை கண்ணைமூடிக் கொண்டு ஆதரிப்பேன்" என்று தாம் கூறியதாக வெளியான போலி ட்வீட்டால் ஹர்பஜன் சிங் ஆத்திரமடைந்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் கடந்த 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு எதிரான போட்டிக்குப் பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதேசமயம் ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு அணிகளில் இடம் பெற்று விளையாடிய ஹர்பஜன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளார்.
இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து ஹர்பஜன் சிங் கூறியது போல் போலி ட்வீட்டை உருவாக்கியுள்ளனர். அதில் "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தேர்வு செய்யாவிட்டால் நான் கண்ணை மூடிக் கொண்டு ஆஸ்திரேலியா அணியை தான் ஆதரிப்பேன்" என அவர் கூறியதாக ரோஹித் சர்மா புகைப்படம் வைத்து ட்வீட் செய்துள்ளனர். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் ஹர்பஜன் சிங் மிகுந்த கோபமும், வருத்தமும் அடைந்துள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டர் பதிவில் "என்னைப் பற்றியும், நான் கூறியதாக சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் போலியானவை. யார் இப்படி போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள் என எனக்குத் தெரியாது. நான் கூறியதுபோல் இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துகளை எப்படிப் பதிவிடுகிறார்கள். அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். இந்தியாவைச் சேர்ந்து ஆதரிப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்குப் பின், அணியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சேர்க்கப்படவில்லை. இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.