கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு கமல்ஹாசன் சென்றது ஆறுதல் சொல்ல அல்ல , படம் ஷூட்டிங் எடுக்க என ட்வீட்டரில் சாடியிருக்கிறார் எச்.ராஜா.
கடந்த 15ம் தேதி கஜா புயலினால் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை என பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. சேதமடைந்த இடங்களை பார்வையிட மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் "நேற்று வரை இங்கு இருக்கும் விவசாயிகள் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். இன்று வாழ்வாதாரத்தை இழந்து விட்டனர். கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் நகரங்களுக்கு இடம் பெயரும் நிலைக்கும் நாம் அவர்களை விட்டுவிடக் கூடாது. விவசாயிகளின் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்" என கமல் கூறியிருந்தார்.
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் களத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை ட்வீட்டரில் வெளியிட்ட பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா " இவர் அங்கு போனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அல்ல , படம் ஷூட்டிங் எடுக்க. வெட்கம்" என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு கமல்ஹாசனின் புகைப்படம் ஒன்றை மட்டும் வெளியிட்டு அதன் மீது விமர்சனம் செய்வது சரியல்ல என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.