தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரான விஜயகாந்த், இப்போது என்ன கண்டிஷனில் இருக்கிறார் என்பதை அவரது குடும்பத்தினரும் நெருங்கிய கட்சிக்காரர்கள் மட்டுமே அறிவார்கள். 'படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முடியாத அளவுக்குத்தான் அவர் உடல்நிலை இருக்கிறது என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.
மக்கள் நலக் கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் விஜயகாந்த். தொண்டையில் நடந்த ஆப்ரேஷனுக்குப் பிறகே அவரது பேச்சில் தெளிவில்லாத தன்மை ஏற்பட்டது. இதனை சரிசெய்வதற்காக கோவில் கோவிலாக ஏறி, இறங்கிக் கொண்டிருந்தார் பிரேமலதா. வாரத்தில் ஒருநாள் போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் டயாலிஸில் முடிந்த பிறகு, ஓரிரு நாட்கள் உற்சாகத்துடன் இருப்பார். அதன்பிறகு சோர்வாகிவிடுவார். இதற்கிடையில், கல்லீரல் தொடர்பான சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
அங்கும் அவருக்கு நல்ல சிகிச்சை கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் விமானத்தில் சென்னை திரும்பியவர், மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். அங்கு அவர் நடந்து கொண்ட விதத்தால் தேமுதிக தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். இதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக கம்பளி போர்த்தியபடி, விமான நிலையத்தில் அவர் வெளியேறிய காட்சியையும் அதிர்ச்சியோடு கவனித்தனர் அவரது நலம் விரும்பிகள்.
இந்த சூழ்நிலையில் மீண்டும் அவர் வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அவரது ஹெல்த் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருவதை கேப்டனின் மகன்கள் விரும்பிவில்லை. இந்தக் கோபத்தை வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றிலும் வெளிப்படுத்தியிருந்தார் அவரது மகன் விஜய பிரபாகரன். ஆனாலும், அவரது உடலுக்கு என்ன பிரச்னை என்பதை வெளிப்படையாக பிரேமலதா பேசவில்லை. இதைப் பற்றிப் பேசும் விஜயகாந்த் நலம் விரும்பி ஒருவர், ' பிரேமலதா பொருளாளர் பதவிக்குத் தேர்வான அன்று பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்டன், அதன்பிறகு எந்த நிகழ்ச்சியிலும் பெரிதாகத் தலைகாட்டவில்லை.
அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் தீவிரமடைந்ததுதான் காரணம். அதாவது, இப்போதெல்லாம் படுக்கையில் இருந்து அவர் எழுந்திருப்பதில்லை. அவராக விரும்பினால் யாராவது போய் எழுந்து உட்கார வைத்தால்தான் உண்டு. அந்தளவுக்கு அவர் உடல்நிலை மோசமடைந்துவிட்டது. பத்து வருடங்களுக்கு முன்பே டாக்டர்கள் சொன்ன எச்சரிக்கையை பிரேமலதா பொருட்படுத்தவில்லை. அதன் விளைவுகள்தான் இதெல்லாம். உள்ளூரிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறார்கள்' என்றார்.
-அருள் திலீபன்